The Largest Tamil Christian's Global Network

 

Coming Soon!

 

Coming Soon!

 

Coming Soon!

  • Welcome to TamilChristian.com
  • Freely you have received, freely give. Matthew 10:8
  • ,ytrkha;g; ngw;wPh;fs;> ,ytrkha;f; nfhLq;fs;. kj;NjA 10:8


பக்தனின் பாதை

கர்த்தருடைய ஜனமே அவருடைய பங்கு, யாக்கோபு அவருடைய சுதந்தரவீதம். பாழான நிலத்திலும் ஊளையிடுதலுள்ள வெறுமையான அவாந்தரவெளியிலும் அவர் அவனைக் கண்டுபிடித்தார், அவனை நடத்தினார், அவனை உணர்த்தினார், அவனைத் தமது கண் மணியைப்போலக் காத்தருளினார்...வயலில் விளையும் பலனை அவனுக்குப் புசிக்கக்கொடுத்தார், கன்மலையிலுள்ள தேனையும், கற்பாறையிலிருந்து வடியும் எண்ணெயையும் அவன் உண்ணும்படி செய்தார். பசுவின் வெண்ணையையும், ஆட்டின் பாலையும், பாசானில் மேயும் ஆட்டுக்குட்டிகள் ஆட்டுக்கடாக்கள் வெள்ளாட்டுக்கடாக்கள் இவைகளுடைய கொழுப்பையும், கொழுமையான கோதுமையையும், இரத்தம்போன்ற சுயமான திராட்சரசத்தையும் சாப்பிட்டாய்.

உபா 32:9-14

கிறிஸ்துவுக்குள் எனக்கன்பானவர்களே, மீட்பர் இயேசுவின் பெயரினால் உங்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்! தேவனுடைய பிள்ளைகளாகிய நம்முடைய நிலைமையையும் நமக்குத் தேவன் செய்கிற நன்மைகளையும் தெளிவாகச் சித்தரித்துக் கூறும் வசனங்கள் இவைகள். ஒரு குறிப்பிட்ட மனிதனுடைய சந்ததியினிடத்தில் இந்த வசனங்கள் சொல்லப்பட்டிருந்தாலும் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட, அவருடைய குமாரனாகிய நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் விலைக்கு வாங்கப்பட்ட அனைவருக்கும் இந்த வசனங்கள் பொருந்துபவைகள். தம்முடைய பிள்ளைகளுக்குத் தேவன் செய்கிற ஐந்து செயல்களை இங்கு நாம் காணலாம்.

1. தேவன் நம்மைக் கண்டுபிடித்தார்.

யாக்கோபைக் கண்டுபிடித்ததுபோல் தேவன் நம்மையும் கண்டுபிடித்தார். தேவன் நம்மை எங்கு கண்டுபிடித்தாராம்? யாக்கோபைக் கண்டுபிடித்ததுபோல் பாழான நிலத்திலும் ஊளையிடுதலுள்ள வெறுமையான அவாந்தரவெளியிலும் அவர் நம்மைக் கண்டுபிடித்தார், ஆம் எனக்கன்பானவர்களே, காட்சிக்கு அழகானதாகவும் மாட்சிமை பொருந்தினதாகவும் இந்த உலகம் காணப்படலாம். ஆனால் உண்மை என்னவென்றால் நம்முடைய தேவன் நம்மை இந்த உலகத்திலிருந்து தெரிந்து கொள்ளும் வரையில் இந்த உலகம் ஒரு பாழான நிலம் தான். நம்முடைய கண்களுக்கும் உணர்வுகளுக்கும் இந்த உலகம் இனிமையானதாகக் காணப்படலாம். ஆனால் ஆவிக்குரிய கண்ணோட்டத்தில் பார்க்கும்பொழுது அது பாழான நிலம் என்பதை மறுக்க முடியாது. நம்முடைய ஆத்துமாவிற்கு இந்த உலகத்தில் பாதுகாப்போ அடைக்கலமோ கிடையாது. ஊளையிடுதலுள்ள வெறுமையான அவாந்தரவெளியாகிய இந்த உலகத்தில் எப்பக்கத்திலும் நம்முடைய ஆத்துமாவிற்கு ஆபத்தும், தீங்குமே காத்திருக்கிறது. ஆனால் நமக்கு இதன் நடுவில் இருக்கும் அருமையான ஆண்டவருடைய வார்த்தை சிதறுண்ட ஆடுகளைப்போல அலைந்து திரிந்த நம்மை அவர் தேடிக் கண்டுபிடித்தார், இந்த பொல்லாத உலகத்திலிருந்து நம்மை மீட்டார் என்பதே (கலா 1:3-4). நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை. நான் உங்களைத் தெரிந்துகொண்டேன் என்ற நம்முடைய ஆண்டவருடைய சொற்கள் எவ்வளவு உண்மையானது. தெரிந்தெடுத்த நம்மை இந்த உலகத்திலிருந்து பிரிக்கிpறார். தம்முடைய பிள்ளைகளாக மாற்றுகிறார் (யோவா 15:15-19). நம்மைப் பற்றி என்ன சொல்லப்பட்டிருக்கிறது? ஆண்டவரின் பங்கு அவர்தம் மக்களே! அவரது உரிமைச் சொத்து யாக்கோபே! (புதிய மொழிபெயர்ப்பு) வானத்தையும் பூமியையும் உண்டாக்கியவர் அவர். கோடிக்கணக்கான தேவதூதர்களின் துதிகளின் நடுவில் வாசம் பண்ணுகிறவர். காணப்படுகிறதும் காணப்படாதவைகளுமான அனைத்தும் அவருடையவைகளே. ஆனால் அவர் தம்முடைய சொத்து என்று கருதுவது அவருடைய பிள்ளைகளாகிய நம்மைத்தான் (யாத் 19:5, மல் 3:17). நாம் ஒருவேளை மற்றவர்களுடைய கண்களுக்கு அற்பமானவர்களாகக் காணப்படலாம். பவுல் சொன்னதுபோல துடைத்துப்போடும் அழுக்கைப்போலக் காணப்படலாம். ஆனால் தேவனோ நம்மைத் தம்முடைய சொத்தாகக் காண்கிறார். நாம் அவருடைய பார்வையில் விலையேறப்பட்டவர்களும் விசேஷித்தவர்களுமாயிருக்கிறோம். அவருடைய சிந்தனை, எண்ணம், நினைவு அனைத்துமே நம்மைச் சுற்றியே இருக்கிறது (சங் 40:17, சங் 34:15). நாமும் தேவனிடத்தில் அன்புகூறவும், உலகத்திலுள்ளவைகளில் அன்புகூறாதிருக்கவும் கற்றுக்கொள்வோம் (1 யோவா 2:15-17, ரோம 12:1-2). வஞ்சிக்கும் உலக சிற்றின்பங்களுக்கு இணங்காமல் உண்மைத் தேவனோடு நேரத்தைச் செலவிடக் கற்றுக்கொள்வோம்.

2. அவர் நம்மை நடத்துகிறார்.

நம்மைக் கண்டுபிடித்த பின்பு அவர் என்ன செய்கிறார்? யாக்கோபை நடத்தினதுபோல் அவர் நம்மையும் நடத்துகிறார். எதற்கு நேராக நடத்துகிறார்? யாக்கோபை எதற்கு நேராக நடத்தினார்? பாலும் தேனும் ஓடுகிற அவர்களுக்கு வாக்குப்பண்ணப்பட்ட நாட்டிற்கு அவர் நடத்திச் சென்றார். ஆனால் அங்கு அவர் நடத்திச் சென்றது ஒரு குறுக்கு வழி அல்ல. ஒரு சுற்று வழி. ஒரு கடினமான வழி (உபா 8:15-16, நெகே 9:19-21). ஆனால் அதுவே சரியான வழி (நீதி 14:12). நம்மையும் எதற்கு நேராக நடத்துகிறார்? தேவன் தாமே கட்டி உண்டாக்குகிற ஒரு நகரத்திற்கு நேராக நம்மை நடத்துகிறார் (எபி 11:10). அன்பானவர்களே, தேவன் ஒருவேளை நம்முடைய வாழ்வில் நாம் பலவிதமான துன்பங்களைச் சந்திக்கும்படி செய்திருக்கிறாரா? நாம் மகிழ்வுடன் அனுபவித்துக்கொண்டிருந்த உலக ஆடம்பரங்களை நம்மை விட்டு எடுத்துள்ளாரா? ஒன்றை நினைவில் கொள்ளுவோம். தேவன் நம்மைப் புடமிடுகிறார். இந்த எதிர்பாராத போராட்டங்கள், மனவேதனைகள் ஆகியவை நம்முடைய பரலோகத்திற்கு நேராய்ச் செல்லும் பாதையில் உள்ள வளைவுகளும் திருப்பங்களுமே. தேவனுடைய வழிகளுக்கும் நம்முடைய வழிகளுக்கும் பல வேறுபாடுகள் உண்டு (ஏசா 55:8-9). நம்முடைய ஆத்துமாவை நித்தியத்திற்கு பக்குவப்படுத்துவதற்காகவே இந்த வழியில் செல்ல நம்மை அனுமதிக்கிறார். தேவனுடைய குடும்பத்தினர் அனைவரும் வழக்கமாகச் சந்திக்கிற அதே முட்களைத்தான் நாமும் சந்திக்கிறோம் (1 கொரி 10:13). மந்தை முழுவதையும் திறமையாயும் சரியான வழியிலும் மேய்த்துச் செல்லுகிற மேய்ப்;பனே நம்மை நடத்திச் செல்லுகிறார்.

3. அவர் நம்மை உணர்த்துகிறார்.

யாக்கோபை உணர்த்தினதுபோல் அவர் நம்மையும் உணர்த்துகிறார். எவைகளை உணர்த்துகிறார்? அவருடைய அன்பை, உண்மையை, நன்மையை நமக்கு உணர்த்துகிறார். நாம் பலவிதமான போராட்டங்களின் வழியே செல்லும்பொழுதுதான் நம்முடைய உண்மை உருவம் நமக்குத் தெரியும். அனைத்தும் நன்றாக இருக்கும்பொழுது நாம் உற்சாகமாகத்தான் காணப்படுவோம். ஆனால் சூழ்நிலைகள் நமக்குப் பாதகமாக மாறும் வேளையில் நம்முடைய நம்பிக்கை, விசுவாசம், உற்சாகம் எங்கே போகும் என்று நமக்குத் தெரியாது. அப்பொழுது அவர் நமக்குக் கற்றுத் தருகிறார் (உபா 8:2-5). நாம் பெலவீனர் என்பதையும் அவர் பெலப்படுத்தப் போதுமானவர் என்பதையும், நாம் ஒன்றும் இயலாதவர்கள் என்பதையும், அவர் சர்வ வல்லவர் என்பதையும், நாம் குற்றம் இழைப்பவர்கள் என்பதையும், அவர் நம்முடைய குற்றங்களை மன்னிக்க கிருபையுள்ளவர் என்பதையும், நாம் தடுமாறுகிறவர்கள் என்பதையும், அவருடைய உறுதியையும், நம்முடைய அவநம்பிக்கையையும், அவர் நாம் உண்மையில்லாதவர்களாயிருந்தும் அவர் தம்முடைய வார்த்தையில் உண்மையுள்ளவராயிருப்பதையும். நமக்கு உணர்த்துகிறார். அவருடைய கிருபை நமக்குப் போதும் என்பதை உணருகிறோம். அவருடைய மகத்துவத்தையும் வல்லமையையும் உணருகிறோம். குருடரை அவர்கள் அறியாத வழியிலே நடத்தி, அவர்களுக்குத் தெரியாத பாதைகளில் அவர்களை அழைத்துக்கொண்டுவந்து, அவர்களுக்கு முன்பாக இருளை வெளிச்சமும், கோணலைச் செவ்வையுமாக்குவேன், இந்தக் காரியங்களை நான் அவர்களுக்குச் செய்து, அவர்களைக் கைவிடாதிருப்பேன் என்பதல்லவா நம்முடைய ஆண்டவருடைய சொற்கள் (ஏசா 42:16). அவருடைய பெலன் நம்மைத் தாங்குவதையும், அவர் நமக்காகச் செயலாற்றுவதையும், அவர் நடப்பிக்கிற அற்புதமான செயல்களையும் நாம் கண்டு உணர்கிறோம். நம்முடைய விசுவாசம் விருத்தியடைகிறது.

4. அவர் நம்மைத் தம்முடைய கண்மணியைப்போல் காக்கிறார்.

யாக்கோபைத் தமது கண் மணியைப்போலக் காத்தருளினவர் நம்மையும் தமது கண் மணியைப்போலக் காத்தருளுகிறார். விசுவாசிகளுக்கு சொல்லப்பட்டிருக்கிற பாதுகாப்பைப் பாருங்கள்! இது தேவன் எவ்வாறு தம்முடைய மக்களுக்குப் பாதுகாவலராயிருக்கிறார் என்பதைக் காட்டுகிறது. அவரது இடைவிடாத கவனிப்பைக் காட்டுகிறது. ஆம். ஒருவேளை நாம் எளிமையாக தனித்து விடப்பட்டு ஒரு குடிசையில் மிகவும் ஏழ்மையாக குடியிருப்பவர்களாக இருக்கலாம். ஆனால் பரலோகப் பிதாவோடு நாம் அவரது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினாலே ஒப்புரவாகியிருப்பது உண்மையானால், அவரை நாள்தோறும் தேடுகிறது உண்மையானால், அநேகம் பிரபுக்களைப் பார்க்கிலும் நாம் மேலானவர்களே. எந்த மன்னரும் கொடுக்க முடியாத, எந்த சம்பத்தும் வாங்க முடியாத, எந்த உலக அதிகாரமும் பெற்றுக் கொள்ள முடியாத பாதுகாப்பு நமக்கு உண்டு. நம்முடைய தேவன் ஒரு இமைப் பொழுதுகூட நம்மை மறக்கிறவர் அல்லர் (ஏசா 44:21, ஏசா 49:15). நம்முடைய தலையிலிருந்து ஒரு முடிகூட அவரது அனுமதியின்றி விழுவதில்லை (மத் 10:30). நம்முடைய வழிநெடுகிலும் நம்மைப் பாதுகாப்பார் (சங் 91:11).

5. அவர் நம்மைப் போஷிக்கிறார்.

யாக்கோபைப் போஷித்ததுபோல் நம்மையும் அவர் போஷிக்கிறார். இது அவர் நம்முடைய அனுதின தேவைகளைச் சந்திக்கிறார் என்பதை நமக்குக் காட்டுகிறது. நமக்கு அனுபவம் இல்லாத கடினமான பாதைகளில் அவர் நம்மை நடத்தினாலும் அதின் நடுவிலும் நம்மைப் போஷிப்பார். யாக்கோபை எப்படிப் போஷித்தார். பரிபூரணமாய்ப் போஷித்தார் (உபா 32:13-14). அவர்கள் நடந்து வந்த பாதை சிரமமானதுதான். ஆனால் அதின் நடுவிலும் அவர்களுக்கு ஒரு குறைவும் இன்றி அவர்களை நடத்தினார். அவர் தம்முடைய மிகுந்த மனஉருக்கத்தின்படியே, அவர்களை வனாந்தரத்திலே கைவிடவில்லை. அவர்களை வழிநடத்தப் பகலிலே மேகஸ்தம்பமும், அவர்களுக்கு வெளிச்சத்தையும் அவர்கள் நடக்கவேண்டிய வழியையும் காட்ட இரவிலே அக்கினிஸ்தம்பமும், அவர்களை விட்டு விலகவில்லை. அவர்களுக்கு அறிவை உணர்த்த தம்முடைய நல் ஆவியைக் கட்டளையிட்டார். அவர்கள் வாய்க்கு தம்முடைய மன்னாவை அருளி, அவர்கள் தாகத்துக்குத் தண்ணீரைக் கொடுத்தார். இப்படி நாற்பது வருஷகாலமாக வனாந்தரத்தில் அவர்களுக்கு ஒன்றும் குறைவுபடாதபடிக்கு, அவர்களைப் பராமரித்துவந்தார். அவர்கள் வஸ்திரங்கள் பழமையாய்ப்போகவுமில்லை, அவர்கள் கால்கள் வீங்கவுமில்லை (நெகே 9:19-21). நம்மையும் காப்பார். அன்றன்றுள்ள தேவைகளைத் தருவேன் என்று வாக்குப்பண்ணியிருக்கிறார் (மத் 6:25-34). நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினால் நிவிர்த்திசெய்ய இயலாத குறை என்று எதுவுமே இல்லை. நீங்கள் சம்பூரணமாகச் சாப்பிட்டு, திருப்தியடைந்து, உங்களை அதிசயமாய் நடத்தி வந்த உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பீர்கள். என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப் போவதில்லை என்று யோவேல் 2:26ல் நம்முடைய தேவன் சொல்லியிருக்கிறார் அல்லவா?

இப்படிப்பட்ட வழியில்தான் நான் நடக்கவேண்டுமா என்று நாம் ஒருவேளை கேட்கலாம். அப் 14:22, 2 தீமோ 3:12 ஆகிய வசனங்கள் இக்கேள்விக்கு விடையளிக்கின்றன. நமக்கு ஒரு வழி உண்டு. நமக்கு நியமிக்கப்பட்ட ஒரு ஓட்டம் உண்டு (எபி 12:1-2). அதில் நாம் பொறுமையோடு ஓடவேண்டும். யோபின் சொற்களைக் கவனித்துப் பாருங்கள். ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார். அவர் என்னைச் சோதித்தபின் பொன்னாக விளங்குவேன் (யோபு 23:10). யோபுக்கு முன் இருந்த எல்லாவற்றைப்பார்க்கிலும் இரண்டத்தனையாய்க் கர்த்தர் அவனுக்குத் தந்தருளின தேவன் (யோபு 42:10) யாக்கோபு மூலமாக நமக்கு இதோ, பொறுமையாயிருக்கிறவர்களைப் பாக்கியவான்களென்கிறோமே! யோபின் பொறுமையைக்குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். கர்த்தருடைய செயலின் முடிவையும் கண்டிருக்கிறீர்கள். கர்த்தர் மிகுந்த உருக்கமும் இரக்கமுமுள்ளவராயிருக்கிறாரே (யாக் 5:11) என்று எழுதிவைத்துள்ளார். நம்முடைய வழிகள் நாம் அறியாதவைகளாக இருக்கலாம். ஆனால் அவருக்குத் தெரியாதவைகளல்ல. அவர் அனுபவம் நிறைந்தவர். நன்கு நடத்துவார் (சங் 32:8-9). நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன், திகையாதே, நான் உன் தேவன், நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன், என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன் (ஏசா 41:10) என்ற ஆண்டவர் நம்முடன் இருக்கிறார். நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன், நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை, நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய், அக்கினிஜூவாலை உன்பேரில் பற்றாது (ஏசா 43:2) என்றவர் இவை எல்லாவற்றிலும் நமக்கு முற்றும் ஜெயத்தைத் தருவார் (ரோம 8:37). ஒருவேளை நம்முடைய வழிகள் இருளாகத் தோன்றலாம். ஆனால் மரண இருளின் பள்ளத்தாக்கிலும் தேவன் நம்மோடிருக்கிறார் (சங் 23:4). இரவையும் பகலாக்குகிறவர் அவர் (சங் 139:11-12). நம்முடைய கால் சறுக்குகிறது என்று நாம் சொல்லும்போது, கர்த்தருடைய கிருபை நம்மைத் தாங்கும் (சங் 94:18). எரிகிற அக்கினிச் சூளையின் நடுவே நான்காவது நபராக வந்து தம்முடைய பிள்ளைகளைக் காத்தவர் நம்மையும் காப்பார்.

நம்முடைய வழிகளில் அவரது கற்பனைகளைக் கைக்கொண்டு அவர் உணர்த்தும்பொழுது உணர்ந்து நம்முடைய எண்ணங்களை, நம்முடைய செயல்களை, நம்முடைய பழக்கவழக்கங்களை, நம்முடைய விருப்பங்களை அவருக்கு விருப்பமான விதத்தில் மாற்றிக்கொள்வோமானால் நமக்கு அது மிகவும் பயனுள்ளதாக அமையும். நம்முடைய நெருக்கங்களை அவரிடத்தில் அறிவித்து, அவருடைய சகாயத்தைப் பெற்றுக்கொண்டு அவரோடு இணைந்து நம்முடைய பரலோகப் பயணத்தைத் தொடர்வோம். நம்முடைய வாழ்வும் முடிவும் மகிமையானதாக அமையும் (சங் 23:6). தேவனுடைய கிருபையினாலும், இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினாலும் நீதிமான்களாக்கப்பட்டுள்ள நமக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கலாம், ஆனால் கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று நம்மை விடுவிப்பார் (சங் 34:19). இந்த ஏழை கூப்பிட்டான்(ள்), கர்த்தர் கேட்டு, அவனை(ளை) அவன்(ள்) இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கி இரட்சித்தார் என்பது நம்முடைய சாட்சியாகவும் நிச்சயமாக அமையும் (சங் 34:6). இப்படிப்பட்ட ஆசீர்வாதங்களை தேவன் நம் ஒவ்வொருவருக்கும் தந்தருள்வாராக. ஆமென்.

வாழ்த்துக்கள்!

நான் உங்களுக்குக் கட்டளையிட்டயாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென். மத்.28:20

Light of the World

Light of the WorldLight of the World
I am the light of the world. Whoever follows me will never walk in darkness, but will have the light of life. Jn.8:12
Add ChurchAdd Church
Churches in your area, Add a Church Location or Search for one near you.