Sunday, June 24, 2018


The Largest Tamil Christian's Global Network



இருக்கிறவராக இருக்கிறேன் யாத் 3:14

நம்முடைய ஆண்டவர் மிகவும் பெரியவர். நம்முடைய அறிவுக்கும் அறிந்து கொள்ளும் ஆற்றலுக்கும் அப்பாற்பட்டவர். ஆனால் அவர் தாமாக மனிதர்களுக்குத் தம்மை வெளிப்படுத்தியுள்ளார். வேதத்தில் உள்ள தேவனுடைய முதன்மையான பெயர்கள் பலவிதமான நெருக்கங்களின் நடுவில் இருந்த மனிதர்களுக்குத் தேவனாகிய கர்த்தரைப் பற்றி விளக்கிச் சொல்வதாக அமைந்திருந்தன. அவர்கள் ஒன்றும் இயலாத நிலைமையில் இருந்த வேளையில் அவர்களை எதிர் நோக்கி இருந்த பிரமாண்டமான சவால்களைச் சந்திக்கக்கூடிய சரியான நபர் தேவனாகிய தானே என்று அவர்கள் உணரும்படி அவர்களிடம் தம்முடைய அற்புதமான பெயர்களை வெளிப்படுத்தினார். அந்தப் பெயர்களிலிருந்து நம்முடைய தேவனுடைய பண்புகளையும் அவருடைய தனித்தன்மைகளையும் நாம் அறிந்து கொள்கிறோம். நம்முடைய தேவன் எப்படிப்பட்டவர்? அவருடைய அன்பு, இரக்கம், பொறுமை, கிருபை, வல்லமை ஆகியவைகள் எப்படிப்பட்டவைகள்? அவருக்கு விருப்பமானது எது? எவைகளை அவர் வெறுக்கிறார்? இப்படிப்பட்ட கேள்விகளுக்கு வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிற அவருடைய பெயர்கள் விளக்கம் அளிக்கின்றன. அவருடைய அற்புதமான பெயர்களில் ஒன்றை நாம் இப்பொழுது சிந்திப்போம்.

ஒருமுறை மோசே என்ற ஒரு மனிதரிடம் அவர் இவ்வாறு பேசினார். 'அப்பொழுது மோசே தேவனை நோக்கி: நான் இஸ்ரவேல் புத்திரரிடத்தில் போய், உங்கள் பிதாக்களுடைய தேவன் உங்களிடத்தில் என்னை அனுப்பினார் என்று அவர்களுக்குச் சொல்லும்போது, அவருடைய நாமம் என்ன என்று அவர்கள் என்னிடத்தில் கேட்டால், நான் அவர்களுக்கு என்ன சொல்லுவேன் என்றான். அதற்குத் தேவன்: இருக்கிறவராக இருக்கிறேன் என்று மோசேயுடனே சொல்லி, இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று இஸ்ரவேல் புத்திரரோடே சொல்வாயாக என்றார்' (யாத் 3:13,14)

இந்த வார்த்தைகள் பேசப்பட்ட நாட்களை நம்முடைய நினைவிற்குக் கொண்டு வருவோம். இஸ்ரவேல் மக்கள் எகிப்து நாட்டிலே அடிமைகளாக இருந்தனர். அவர்களை அங்கிருந்து விடுதலையாக்கி மீட்டுக் கொண்;டுவர அவர்களில் ஒருவராகிய மோசே எடுத்த முதலாவது முயற்சி தோல்வியில் முடிந்தது. தோல்வியின் காரணமாக மோசே மீதியான் நாட்டிற்கு ஓடிவிட்டார். அங்கே நாற்பது ஆண்டுகள் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். ஆனாலும் நம்முடைய தேவன் எகிப்து நாட்டிலிருந்து தம்முடைய மக்களை விடுவித்து அழைத்து வரும்படி அதே மோசேயைத் தெரிந்து கொண்டார்.

வேதம் சொல்லுகிறது, 'சிலகாலம் சென்றபின், எகிப்தின் ராஜா மரித்தான். இஸ்ரவேல் புத்திரர் அடிமைத்தனத்தினால் தவித்து, முறையிட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்கள் அடிமைத்தனத்திலிருந்து முறையிடும் சத்தம் தேவசந்நிதியில் எட்டினது. தேவன் அவர்கள் பெருமூச்சைக்கேட்டு, தான் ஆபிரகாமோடும் ஈசாக்கோடும் யாக்கோபோடும் செய்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்தார். தேவன் இஸ்ரவேல் புத்திரரைக் கண்ணோக்கினார். தேவன் அவர்களை நினைத்தருளினார்.' (யாத் 2:23-25) தேவன் தம்முடைய மக்களை மறக்கிறவர் அல்லர். நம்முடைய பெருமூச்சைக் கேட்கிறவர், நம்மைக் காண்கிறவர், நம்மை நினைவுகூருகிறவர், நமக்காக செயலாற்றுகிறவர்.

இஸ்ரவேல் மக்களுக்காக எகிப்தின் அரசனிடம் சென்று பேசும்படி எரியும் முட்செடியிலிருந்து மோசேயை அழைத்தார் (யாத் 3:10). மோசேக்கு உடனே தன்னுடைய முந்தைய முயற்சியில் ஏற்பட்ட தோல்விதான் நினைவிற்கு வந்திருக்க வேண்டும். ஆகவே மோசே ஆண்டவரைப் பார்த்து நான் எம்மாத்திரம் என்று சொன்னார் (யாத் 3:11). மோசேயின் அச்சத்தையும் கோழைத்தனத்தையும் இங்கு நாம் பார்க்கிறோம். ஆனால் வேறு ஒரு இடத்தில் இது போன்ற ஒரு பெரிய சவாலைச் சந்திக்க நேர்ந்த வேறு ஒரு மனிதனைக் குறித்து நாம் வேதத்தில் வாசிக்கிறோம். தாவீது என்று அழைக்கப்பட்ட அந்த இளைஞன் இஸ்ரவேல் மக்களுக்காகக் கோலியாத் என்ற அரக்கனோடு போர்புரிய செல்ல வேண்டியதாயிற்று. தாவீது கடுகளவும் அச்மின்றி அந்தக் கோலியாத்தைச் சந்திக்கச் சென்றார்.

மோசேக்குப் பயமும், தாவீதுக்குத் துணிச்சலும் ஏற்படக் காரணம் என்ன? மோசே தன்னுடைய இயலாமைகளையும் கடந்த கால தோல்விகளையும் குறித்தே சிந்திக்கிறவராய் இருந்தார். ஆனால் தாவீதின் அனுபவம் வேறுபட்டிருந்தது. தாவீதைக் குறித்து அவரது சகோதரர் முதற்கொண்டு அரசன் வரை அனைவரும் குறைவாகவே பேசினார்கள். ஆனால் தாவீது அவைகள் ஒன்றையும் பொருட்படுத்தவில்லை. எந்நேரமும் தேவனைக்குறித்தும் அவருடைய மகத்துவங்களைக் குறித்தும் சிந்திக்கிறவராய் இருந்தார். கோலியாத்தைப் பார்த்து நான் என்னுடைய தேவனுடைய பெயரினால் வருகிறேன் என மார் தட்டிக் கூறினார். நம்முடைய தேவனைக்குறித்த அறிவு எவ்வளவு பெரிய வீரத்தை தாவீதுக்குத் தந்துள்ளது! (1 சாமு 17:1-54) அந்த அறிவைத் தரும்படிக்கே தேவன் நமக்குத் தம்முடைய பெயர்களை வெளிப்படுத்தியுள்ளார்.

மோசே ஒரு வேளை ஒன்றும் செய்ய இயலாதவராக இருந்திருக்கலாம். ஆனால் மோசேயை அழைத்த தேவன் அனைத்தையும் செய்ய வல்லவராக இருக்கிறார் (யோபு 42:2; எசே 32:27). அவர் சொன்னார் நான் இருக்கிறேன், என்னால் எல்லாம் கூடும். என்னால் கூடாத செயல் ஒன்றுமில்லை. ஆம். தேவனாலே கூடாத செயல் ஒன்றுமில்லை. இந்த உண்மையை நன்கு உணர்ந்த பவுல் சொன்னார், 'என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு' (பிலி 4:13). இருக்கிறேன் என்றவர் இருக்கிறவராகவே இருக்கிறார். தம்மில் தாமே ஜீவனுள்ளவராய்ச் சாவாமையுள்ளவராய் என்றென்றைக்கும் உயிருள்ளவராய் இருக்கிறார். அவருடைய அன்பு, கிருபை, வல்லமை ஒருநாளும் மாறிப்போவதில்லை. இலட்சக்கணக்கான மக்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து அவர்களைப் பாலும் தேனும் ஓடுகிற நல்ல நாட்டிற்கு வழிநடத்த வல்லமையுள்ளவராய் அவர் அந்நாளில் இருந்தாரா? இருந்தார். இன்று மலை போன்று தோன்றுகிற நம்முடைய அனைத்துத் தேவைகளையும் சந்திக்க வல்லமையுள்ளவராக அவர் இருக்கிறாரா? இருக்கிறார். இனிவரும் நாள்களுக்கும் நம்மை வழிநடத்த அவர் போதுமானவரா? அவருடைய திருப்பெயர் சொல்லுகிறது அவர் இருக்கிறார். அல்லேலூயா! அவரே இருந்தவரும் இருக்கிறவரும் எல்லாகாலங்களிலும் இருக்கப் போகிறவருமானவர் தொடக்கமும் முடிவும் இல்லாதவர். மாறாதவர், என்றென்றும் இருப்பவர்.

சில நாட்களில் புதிய ஆண்டிற்குள் புகுந்திடஇருக்கிற நாமும் மோசேயைப் போல நம்முடைய கடந்த கால தோல்விகளையையும், குறைவுகளையும், நினைத்துக்கொண்டு இருப்போமேயானால் நமக்கும் மோசேயைப் போல் அதைரியமே வரும். ஆனால் தாவீதைப் போல இருக்கிறவராக இருக்கிறேன் என்று சொன்ன நம்முடைய தேவனை நாம் எந்நேரமும் சிந்திப்போமேயானால் நமக்குத் தேவையான தைரியம் உண்டாகும். இருக்கிறவராக இருக்கிறவர். கடந்த நாள்கள் முழுவதும் நம்மோடிருந்து நம்மை வழிநடத்தினவர். வருகிற ஆண்டிலும் நம்மைப் பாதுகாப்பார். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் (மத் 28:20)

என்ற நம்முடைய மீட்பர் இயேசு கிறிஸ்துவின் உறுதிமொழி வருகிற ஆண்டு முழுவதற்கும் நமக்குரியது அல்லவா?

Light of the World

Light of the WorldLight of the World
I am the light of the world. Whoever follows me will never walk in darkness, but will have the light of life. Jn.8:12
Add ChurchAdd Church
Churches in your area, Add a Church Location or Search for one near you.